திரை உலகில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ‘பாஸ்டின்’ உணவகம், தற்போது அதன் அதீத விலையினால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் விருப்பமான இடமாகத் திகழும் இந்த உணவகத்தின் ஒரு இரவு வருவாய் மட்டும் சுமார் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என ஒரு சமூக ஆர்வலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறிப்பாக, இங்குள்ள வசதிகள் மற்றும் பிரம்மாண்டமான உள்அலங்காரங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தாலும், சாதாரண உணவுப் பொருட்களுக்குக் கூட நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த உணவகத்தின் விலைப்பட்டியலில், ஒரு ஜாஸ்மின் ஹெர்பல் டீயின் விலை ரூ.920 என்றும், இங்கிலீஷ் ப்ரேக்பாஸ்ட் டீ ரூ.360-க்கும் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும், சிக்கன் புரிடோக்கள் ரூ.900 மற்றும் மிளகாய் பூண்டு நூடுல்ஸ் ரூ.675 எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் உச்சகட்டமாக ஒரு பாட்டில் ஷாம்பெயின் விலை ரூ.1,59,500 என குறிப்பிடப்பட்டுள்ளது. நீச்சல் குளம், காடு போன்ற அமைப்புகள் மற்றும் உயர்தர பார் வசதிகள் கொண்ட இந்த உணவகத்தின் விலை விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி விவாதங்களை கிளப்பியுள்ளது.