தமிழ்நாட்டையே உலுக்கிய நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம் மீண்டும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

​இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முதலமைச்சரின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், வழக்குத் தொடங்கிய சில நாட்களிலேயே சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான் பயணித்த கார் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கியது. இதில் சயான் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில், அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

​அடுத்த சில நாட்களில், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இத்தொடர் மரணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கோடு தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

​கோடநாடு கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்து வரும் சூழலில், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து விபத்து, தற்கொலை மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பீதியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.