
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது, நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிகளுக்கு எதிரானது. மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித் திட்டத்தில் தேர்வு என்றால் எப்படி எழுத முடியும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். நீட் தேர்வு அடிப்படையில் மாநிலக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறக்கூடாது.
அதன்பிறகு தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உடனடியாக ஒன்றிய அரசு இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நடிகர் விஜய் பேசும்போது திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் பேசுவது போன்று மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் முதல் முறையாக கல்வி குறித்து நடிகர் விஜய் பேசிய விஷயம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் திமுக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு அவர் ஆதரவு கொடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.