அவர்கள் நினைத்தால் தனித்தனியாக நடக்க முடியாது, தனித்தனியாக ஒரு அறையை விட்டு வெளியேற முடியாது. ஏன், ஒருவருக்கு வலித்தால் மற்றவருக்கும் வலிக்கும். பிகார் மாநிலம் பாட்னாவின் ராஜா பஜார் சமன்புரா பகுதியில் வசிக்கும் சபா மற்றும் ஃபரா என்ற 23 வயது சகோதரிகளின் வாழ்க்கை இது. பிறப்பாலேயே தலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்பிறந்த இந்த இரு மலர்களின் நறுமணம், இன்று ஒரு சின்னஞ்சிறு இருட்டறைக்குள் மருந்துகளின்றி கருகிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் சாதாரணமாக வாழ விரும்புகிறார்கள், உலகத்தைச் சுற்றி வர ஆசைப்படுகிறார்கள், புனித ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்ற தீராத கனவோடு இருக்கிறார்கள். ஆனால், இந்த அத்தனை கனவுகளையும் பாட்னா அரசு அதிகாரிகளின் அலட்சியம் மெல்ல மெல்லக் கொன்று கொண்டிருக்கிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு, இந்த இரு பெண்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நாட்டின் மிக உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இவர்களின் எலும்புகள், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், மாதாந்திரப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் தினமும் 6 வகையான மருந்துகள் பாட்னா சிவில் சர்ஜன் அலுவலகத்தால் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அத்துடன், PMCH மருத்துவமனையின் 6 நிபுணர்கள் கொண்ட குழு இவர்களை மாதந்தோறும் பரிசோதித்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை டெல்லி எய்ம்ஸ் ம ருத்துவமனைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

ஆனால், இன்று நீதி தேவதையின் உத்தரவு அதிகாரிகளின் மேஜைக் கோப்புகளில் தூங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக சபா மற்றும் ஃபராவிற்கு ஒரு மாத்திரை கூட வழங்கப்படவில்லை. மருந்துகள் நிறுத்தப்பட்டதால் சபா மற்றும் ஃபராவின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எலும்புகளில் தொடர் மரண வலி, கைகால்களில் கடுமையான வீக்கம், தைராய்டு அளவு அதிகரிப்பு என இரு பெண்களும் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி அவர்களின் அண்ணன் முகமது தமன்னா கூறும்போது,

“என் தங்கைகளால் இப்போது சரியாகச் சாப்பிடக் கூட முடிவதில்லை, பேசக் கூட முடிவதில்லை. 2020 ஜனவரிக்கு பிறகு ஒரு மருத்துவர் கூட எங்கள் வீட்டிற்கு வந்து இவர்களைப் பார்க்கவில்லை. சிவில் சர்ஜன் அலுவலகத்திற்குப் போய் கெஞ்சிக் களைத்துவிட்டேன். வெறும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சுகின்றன.

இந்த விவகாரம் குறித்து பாட்னா சிவில் சர்ஜன் டாக்டர் யோகேந்திர பிரசாத்திடம் கேட்டபோது, “எனக்கு இந்த விஷயம் இதுவரை தெரியாது. அந்தப் பெண்களின் அண்ணன் என்னை வந்து பார்த்துள்ளார். விரைவில் இரு சகோதரிகளுக்கும் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று வழக்கமான அரசுப் பதிலை அளித்துள்ளார்.

அதிகாரிகளின் ‘எனக்குத் தெரியாது’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால், 23 ஆண்டுகால இரண்டு உயிர்களின் வலி மறைந்திருக்கிறது. சபா மற்றும் ஃபராவின் முடக்கப்பட்ட குரல் அந்தச் சின்ன அறைக்குள்ளேயே அடங்கிவிடக் கூடாது. நாட்டின் சட்டமும் மனிதாபிமானமும் இவர்களுக்கு உடனடியாக மருந்துகளை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு.