
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் பல்வேறு சோதனைகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், ஒக்கியம் துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் அடிக்கடி வாலிபர்கள் வருவது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு -2 இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான குழு, சம்பந்தப்பட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, கரூரைச் சேர்ந்த மலையாண்டி (29) என்பவர் ஐடி ஊழியர்களை குறிவைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தி மலையாண்டி, பல்வேறு ஐடி ஊழியர்களை தொடர்பு கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேலும், வடமாநிலங்களில் செயல்படும் பாலியல் புரோக்கர்களுடன் தொடர்பில் இருந்து, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களை அழைத்து வந்து தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. திரிபுராவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களை மீட்டு போலீசார் பாதுகாப்பு வசதிகள் செய்து வருகின்றனர். மேலும் மலையாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.