
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். தற்போது விக்னேஷின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் விக்னேஷின் நெருங்கிய நண்பர் மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன் போலீசில் தன்னை காட்டி கொடுத்தது விக்னேஷ் தான் என நினைத்து அவ்வபோது தனது நண்பர்களுடன் இணைந்து விக்னேஷுடன் தகராறு செய்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மணிகண்டன் கொலை செய்யப்பட்டார். இதனால் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த விக்னேஷுக்கும் மணிகண்டனின் நண்பர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு மணிகண்டனின் ஆதரவாளர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று அவர்களிடம் சமரசம் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஐந்து பேரும் சுற்றி வளைத்து விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கமல், தனபால், தாமோதரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.