
திருமலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனிவாசலு(70) குரம்மா(68) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதனிடையே மாஸ்டர் பிளான் திட்டத்தில் நான்கு மாட வீதி விரிவாக்கத்திற்காக அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகள் கடந்த 1983 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த தம்பதிகளின் வீடும் இடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சில ஆடுகளுக்கு பின்னர் வீடுகள் மற்றும் கடைகளை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. அந்த கடையில் வளையல் மற்றும் சுவாமி படங்கள் வைத்து சீனிவாசலு குடும்பம் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் இருப்பதால் கடைசி காலத்தில் மகன் தங்களை பார்த்துக் கொள்வான் என்று நம்பி தன்னுடைய பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் மகன் பெயரில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் இவர்களின் மகன் சில வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அதனால் மகனின் பேரில் இருந்த சொத்தை மருமகள் தேவஸ்தான வருவாய் அலுவலகத்தில் கூறி கணவர் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
பிறகு அந்த சொத்துக்களை விற்று பணத்துடன் பிறந்த ஊரான ராஜமுந்திரிக்கு சென்று விட்டார். வீட்டின் சாவியை கூட கொடுக்காமல் மருமகள் எடுத்துச் சென்றதால் வயதான நிலையில் சீனிவாசலு மற்றும் குரம்மா திருப்பதி சேஷாசல நகரில் தவித்தபடி இருந்துள்ளனர். இந்த நிலையில் போதிய உணவில்லாமல் நேற்று முன்தினம் சீனிவாசலு உயிரிழந்த நிலையில் யாரும் உதவி செய்யக் கூட இல்லாமல் சாலையிலேயே சடலத்தை வைத்தபடி குரம்மா பரிதாபமாக அமர்ந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்து முடித்த நிலையில் இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.