அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் அவர் மீண்டும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவரை மும்பை அணி 16.30 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடி ரூபாய்க்கும், சூரியகுமார் யாதவை 16.35 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மாவை 8 கோடி ரூபாய்க்கும், பும்ராவை 18 கோடி ரூபாய்க்கும் மும்பை அணி தக்க வைத்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பை அணியில் கடந்த முறை ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட நிலையில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதாவது மும்பை அணி கடந்த சீசனில் சிறப்பான முறையில் விளையாடவில்லை. அதுவரை கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மாற்றப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்தனர். குறிப்பாக வான்கடே மைதானம் மட்டுமின்றி இந்தியாவில் எந்த ஒரு மைதானத்திற்கு சென்று விளையாடினாலும் ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆனால் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பதிலடி கொடுத்தார். மேலும் தற்போதும் மும்பை அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுவார் என்று தற்போது அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.