2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மைதானத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், பங்கு சந்தை வர்த்தகத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC-க்கு அபார லாபத்தைத் தந்துள்ளது. CSK-யில் LIC வைத்திருந்த 6.04% பங்குகள் தற்போது ரூ.1,000 கோடி வருமானத்தைத் தொடர்ந்து கொண்டு வந்துள்ளன. மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியின் பிராண்டு மதிப்பு, தொடர்ச்சியான ரசிகர் ஆதரவு, மற்றும் வியாபார ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சியே இந்த லாபத்தின் பின்னணி என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2008-ஆம் ஆண்டு இந்தியா சிமென்ட்ஸின் கீழ் CSK அணி இயங்கிக் கொண்டிருந்தபோது, LIC-க்கு அந்த நிறுவனத்தில் 1.8 கோடி பங்குகள் இருந்தன. 2014-இல் IPL விதிகளில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, CSK தனியான நிறுவனமாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், LIC-க்கு அந்த புதிய CSK நிறுவனத்தில் 6.04% பங்குகள் வழங்கப்பட்டன. அப்போது ஒரு பங்கு விலை ரூ.31 ஆக இருந்த நிலையில், 2024இல் இது ரூ.190–195 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு கட்டத்தில் ரூ.223 வரை சென்றது. இதனால், LIC-க்கு 529% வளர்ச்சியுடன் ஆறு மடங்கு லாபம் கிடைத்துள்ளது.

இந்த அபார வளர்ச்சி பங்கு வர்த்தகத்தின் மட்டுமல்லாது, LIC-யின் மொத்த வருவாயிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. 2025 இல் தோனி தலைமையிலான அணியின் விளையாட்டு சாதனைகள் மிகவும் குறைவாக இருந்த போதும், வர்த்தக ரீதியாக CSK நிறுவனத்தின் மதிப்பு வலுப்பெற்றதால், LIC-க்கு வந்த வருமானம் அரசுத்துறையில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தோனியின் பிராண்ட் மதிப்பு மற்றும் CSK-யின் வணிக வெற்றியை LIC மிகச்சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளது.