ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், 10 அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 9 முக்கிய வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் தசைநார் காயம் காரணமாக முழுமையாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்சித் ராணா மற்றும் மதீஷா பதிரானா ஆகிய இரு முக்கிய பந்துவீச்சாளர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹர்சித் ராணா இந்த சீசன் முழுவதையும் தவறவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

​நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது. கம்மின்ஸ் இல்லாததால் இஷான் கிஷன் ஹைதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சாம் கரன், ஹைதராபாத் அணியின் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் இந்த சீசன் முழுமைக்கும் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரும் தொடக்கப் போட்டிகளைத் தவறவிடவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் ஆரம்பமே பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.