கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இருக்கும் பெண்களுக்கான கழிவறைக்கு பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் சென்ற போது பக்கத்தில் இருக்கும் ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில் செல்போன் இருப்பதை கண்டு உடனே வெளியே ஓடி வந்தார்.

அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் உயர் அதிகாரி உள்ளிட்ட நபர்கள் அங்கு ஓடி வந்து பார்வையிட்டபோது ஆண்களுக்கான கழிவறையில் இருந்து நாகேஷ் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. அதிகாரிகள் கண்டித்ததால் நாகேஷ் மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரம் குறித்த பெண் இன்ஜினியர் தனது கணவரிடம் கூறியதால் அவர் நிறுவனத்திற்கு சென்ற நாகேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாகேஷை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் 30-க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது. அவர் அடிக்கடி பெண்களுக்கான கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்தது உறுதியானது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.