ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் (38), கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஷபூர் ஜத்ரானுக்கு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிக ஆபத்தான அளவிற்குத் குறைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஷபூர் ஜத்ரான் விரைவில் குணமடைய வேண்டி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜத்ரானின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜத்ரான் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர், அவர் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Zardan brother is like a buddy to me. I am wishing him speedy recovery. Ameen🤲 pic.twitter.com/8oGPUVwHai
— Umar Akmal (@Umar96Akmal) April 17, 2026
அதேபோல், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, ஜத்ரானின் சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார். இது குறித்து அப்ரிடி வெளியிட்டுள்ள பதிவில், “மைதானத்தில் நீங்கள் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்திருக்கிறீர்கள். இந்த இக்கட்டான சூழலையும் எதிர்த்துப் போராடி மீண்டு வருவீர்கள் என எனக்குத் தெரியும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷபூர் ஜத்ரான், ஆப்கானிஸ்தான் அணிக்காக 80 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 44 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 36 போட்டிகளில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
தனது இடதுகை வேகப்பந்து வீச்சால் பலமுறை ஆப்கானிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித்தந்த இந்த ‘போராளி’ வீரர், விரைவில் நலம்பெற வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
