
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் 49.5 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடர்களான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜாகீர் கான் 59 விக்கெட்டைகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை தற்போது பின்னுக்கு தள்ளி முகமது ஷமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.