கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் “பேய் பிடித்திருக்கும்” என்ற காரணத்தால், 53 வயது பெண் ஒருவர் தீவிரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் பத்ராவதி தாலுகாவின் ஜம்பர்கட்டே கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் கீதம்மா (வயது 53). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆஷா என்ற பெண், தன்னை “தெய்வ சக்தி கொண்டவர்” என்றும், சவுடம்மா தேவி அவரது உடலில் வந்துள்ளார் என்றும் கூறி, கிராம மக்களிடையே பேய் விரட்டும் சடங்கு நடப்பதாக வதந்தி பரப்பினார். இதை நம்பிய கீதம்மாவின் குடும்பத்தினர், “தீய ஆவி பிடித்துவிட்டது” எனக் கூறி, கீதம்மாவை ஆஷாவிடம் அழைத்துச் சென்றனர்.

அதன்பின், ஞாயிறு இரவு 9 மணி முதல் திங்கள் அதிகாலை 3 மணி வரை, ஆஷா “பேய் விரட்டுகிறேன்” என்ற பெயரில் கீதம்மாவை தொடர்ந்து பிரம்பால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் கீதம்மா மோசமாகக் காயமடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டது. “தீய ஆவி வெளியேறிவிட்டது, இப்போது சிக்கல் இல்லை” என கூறிய ஆஷாவின் வார்த்தையை நம்பிய குடும்பத்தினர், பின்னர் கீதம்மாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஹோலேஹொன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீதம்மா, ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, ஹோலேஹொன்னூர் போலீசார் ஆஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மூடநம்பிக்கையால் ஒரு பெண் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.