எஸ்.எஸ்.சி தேர்வு இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. எனவே அதனை சரிசெய்து நீட்டிக்க வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல்  பிப்ரவரி 17 ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. நாளை (17ஆம் தேதி) விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக இருக்கிறது.

இந்நிலையில் இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்கு உள்ளாகினர். www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இணையதளம் இயங்காததால் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல இன்றும் இணையதளம் முடங்கியுள்ளதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேவர்கள் தவித்துள்ளனர்.

இணையதளம் முடங்கியுள்ளதால் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என எம்.பி சு வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். முடங்கி இருக்கும் இணையதளத்தில் விரைந்து சரி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தேர்வர்கள் கூறுவதாவது, ஜனவரி 18ஆம் தேதி முதல்  பிப்ரவரி 17 ஆம் தேதி வரை  விண்ணப்பிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரமாகவே சர்வர் மிகவும் மெதுவாக உள்ளது. இரவும் கூட விண்ணப்பிக்க முடியவில்லை.. எனவே அரசு எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாட்களைநீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால்  உதவியாக இருக்கும் என  கோரிக்கை வைத்து வருகின்றனர்