
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.
இந்த நிலையில் முப்படை அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி கூறியதாவது, இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு இந்திய தரப்பில் சேதங்களை வெகுவாக குறைத்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என உறுதிபடுத்தியுள்ளார்.