உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடி படிப்பை கவனிக்காததால் தாய் திட்டியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனந்த் கிஷோர் என்ற மாணவன் அதிக நேரம் ஃபிரீ ஃபயர் கேம் விளையாடி படிப்பை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவரது தாய் அவரை திட்டி விளையாடுவதை நிறுத்தும்படி கூறியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ஆனந்த் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவரை பார்க்க சென்ற தாய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இருப்பினும், ஆனந்த் தனது தாயை பயமுறுத்தும் நோக்கில் தனது கழுத்தில் தூக்கில் போட்டுக்கொண்டு விளையாடி அதில் தவறுதலாக இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். வீட்டில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்ததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாத நிலையில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.