டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் விடுத்த மிரட்டல் குறித்து, தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்திய அணியுடன் விளையாடப் போவதில்லை எனப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருந்தது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐசிசி (ICC) அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டு விளையாடச் சம்மதித்தது.
இது குறித்து ஏபி டிவில்லியர்ஸின் யூடியூப் சேனலில் பேசிய டேல் ஸ்டெயின் கூறியதாவது: “உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்று வருகிறது. இதனால், இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் புள்ளிகளை இந்தியாவுக்கே விட்டுக்கொடுத்துவிட்டு மற்ற அணிகளுடன் மோதி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்று பாகிஸ்தான் நினைப்பதாக ஒரு தகவல் பரவியது. இது முட்டாள்தனமான வாதம் என்றாலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிடம் அவர்கள் சந்தித்து வரும் தோல்விகளைப் பார்க்கும்போது, அந்த வாதத்திலும் ஏதோ ஒரு நியாயம் இருக்குமோ எனத் தோன்றுகிறது” என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில், “இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக அந்தப் போட்டிகள் ஒருதலைப்பட்சமாகவே முடிகின்றன. 2022 மெல்போர்ன் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி வென்று கொடுத்த ஆட்டத்தைத் தவிர, சமீபத்தில் விறுவிறுப்பான ஆட்டம் எதையும் நான் பார்த்த நினைவில்லை” எனத் தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில், பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி, குழு ‘ஏ’ பிரிவில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியும் அமெரிக்காவை வீழ்த்தி தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகளும் டி20 போட்டிகளில் 8 முறை மோதியுள்ளன. இதில் 7 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி பயத்தால் புறக்கணிக்க முயன்றதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிப்ரவரி 15-ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் எவ்வாறு செயல்படப் போகிறது என்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
