உலகமே போற்றும் ‘பயமில்லாத பேட்ஸ்மேன்’ விரேந்தர் சேவாக். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பவுலர்களை அலறவிடுவதுதான் அவர் ஸ்டைல். ஆனால், அப்படிப்பட்ட சேவாக்கையே தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்த ஒரு வீரர் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரே ஒருமுறை, “சேவாக் ஒரு பவுலரைப் பார்த்துத் தயங்குகிறார் என்றால் அது இவர்தான்” என்று வெளிப்படையாகச் சொன்னார். அவர் வேறு யாருமல்ல, ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் நேதன் பிராக்கன்! அந்த நீண்ட தலைமுடியுடன் ஸ்விங் பந்துவீச்சில் மிரட்டிய பிராக்கன், இன்று ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ‘அக்கவுண்ட்ஸ் மேனேஜராக’ வேலை பார்க்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
2008-ல் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர், இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் தூண், ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை அள்ளியவர் எனப் பிராக்கனின் கிரிக்கெட் வாழ்க்கை மிக பிரம்மாண்டமானது. 2011-ல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி (RCB) அணி அவரை 1.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டை விட்டே விலக வேண்டியிருந்தது. மற்ற வீரர்களைப் போல வர்ணனையாளராக மாறாமல், துணிச்சலாக கார்ப்பரேட் துறையைத் தேர்ந்தெடுத்தார். தற்போது நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் இவர், அரசியலிலும் குதித்துத் தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தார். காலம் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு நேதன் பிராக்கனின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்!
