உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெல்பார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, கோபத்தில் சனிக்கிழமை ஒரு மொபைல் கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த இளைஞர், தனது பண்ணையை விற்று, மனைவியை நர்சிங் படிப்பில் சேர்த்து, நீட் தேர்வுக்கும் தயாராக உதவியதாகவும், பின்னர் அவள் மருத்துவமனையில் வேலை பெற்றவுடன், வேறொரு ஆணுடன் நேரடி உறவில் வாழத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

இதைப் பற்றி பேசும் அந்த இளைஞர், “நான் வீட்டிலிருந்து கோரக்பூர் மருத்துவமனையில் இருக்கும் மனைவிக்காக உணவுப் பொருட்கள் அனுப்பியதுடன், எல்லா வசதிகளும் செய்து வைத்தேன். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு அயோத்தியில் இருந்து திரும்பியபோது, அவளது வீடு பூட்டப்பட்டிருந்தது. உரிமையாளரிடம் கூறி கதவை திறக்கச் சொல்லி உள்ளே சென்றபோது, அவள் வேறொரு ஆணுடன் இருந்ததைக் கண்டேன்” என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி, மனைவியிடம் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்ததாகவும், அதற்குப்பிறகு  அதே ஆணுடன் வாழத் தொடங்கியதையும் அந்த இளைஞர் கூறுகிறார். தன்னை ஏமாற்றிய மனைவிக்கு எதிராக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியதால், மனவேதனையில் அவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ராம்பூர் பாகௌரா பகுதியில் உள்ள மொபைல் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.

இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும், கோலா காவல் நிலைய போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, பல மணி நேரம் பேசிச் சமாதானம் செய்து இறுதியில் அந்த இளைஞரை பாதுகாப்பாக கீழே இறக்கிவைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மனைவிக்கு எதிராக புகார் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.