
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர், 44 வயதான மைனக் பால். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். சமீபத்தில், விடுமுறைக்காக இரண்டு நண்பர்களுடன் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். லால்குவானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த பிறகு, மைனக்கிற்கு குடும்பத்தினரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மகள் காணவில்லை என்று கூறியுள்ளனர்
மைனக் தனது நண்பர்களிடம் அவசரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கூறினார். பின்னர் அவரை ஹோட்டலில் விட்டுவிட்டு அவரது நண்பர்கள் அப்பகுதியை சுற்றி பார்க்க சென்றானர். அக்டோபர் 8 ஆம் தேதி இரவு, மைனக்கின் மனைவி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டார்.ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. கவலையடைந்த அவர், ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டார்.
ஹோட்டல் ஊழியர்கள் அறையை உடைத்து பார்த்தபோது, மைனக் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். மேலும், அவரது கை மற்றும் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. ஹோட்டல் ஊழியர்களின் புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணைகள் தற்கொலைக்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.