கொலை குற்றவாளி யுவராஜின் தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு கொலையான கோகுல் ராஜின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இது அவருடைய பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. படிப்பறிவில்லாத கோகுல் ராஜின் தாயார், இளம் வயதிலேயே கணவரை இழந்தபோதும். மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்து கல்லூரிக்கு மேல் படிப்புக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் கொலை வாழ்வையே மாற்றிவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இந்த வழக்குக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “என் மகன் எந்த தவறும் செய்யவில்லை, திருடல, எந்த பெண்ணையும் தவறாக எதுவும் செய்யவில்லை, ஒன்னுமே செய்யாத என் மகனை சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தி தலையை துண்டித்து கொலை செய்து விட்டார்கள். என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது” என தெரிவித்தார்.