உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், கடந்த 2007ம் ஆண்டு தனது மருமகனான அகீல் அகமதைக் கொடூரமாக உயிருடன் எரித்த மாமியார் நிசார் ஜஹான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு  ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஏடிஜே தேவேந்திரநாத் சிங், அரசு தரப்பின் வலுவான சாட்சிகளை வைத்து தீர்ப்பை வழங்கினார்.

இந்நிலையில் அகீல் அகமது, சீதாபூர் பிஏசி பகுதியில் தலைமைக் காவலராக பணியாற்றிய நிலையில் சுந்தர்வால் கிராமத்தைச் சேர்ந்த ஷாஹீனுடன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு, ஷாஹீனும் அவரது பெற்றோர்களும் அகீலை தனியாக வாழ வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாகின் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் அறையில் தனியாக இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய அகீல் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகிலை அவரது மாமியார் அழைத்து தன்னுடைய மகளுக்கு திருமணத்தின்போது கொடுத்த வரதட்சணை மற்றும் பரிசு பொருட்களாக அனைத்தையும் திருப்பி தரும்படி கேட்டார்.

அதோடு தன்னுடைய மகளுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழுத்தம் கொடுத்த நிலையில் அகில் தன்னுடைய சகோதரரிடம் தன்னை மாமியார் அடித்து கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். அவர் கூறிய அதே  இரவில் குளியலறையில் தீக்காயங்களுடன் உடல் எரிந்த நிலையில் அகில் பிணமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக அகிலின் மாமியார் நிசார் ஜகான், மனைவி ஷாகின் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது மாமனார் மற்றும் மைத்துனர் இறந்து விட்ட நிலையில் நிசார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. மற்ற குற்றவாளிகள் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு மருமகனை உயிரோடு எரித்துக்கொண்ட அந்த 80 வயது மாமியாருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது