உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராகவேந்திர மிஸ்ரா என்பவர், தனது குடும்பத்துடன் ஹரித்வாரில் இருந்து ஃபசல்கஞ்ச் டிப்போவின் சதாப்தி டிராவல்ஸ் ஏசி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது, அவரது 12 வயது மகனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

குழந்தை பேருந்தின் கழிப்பறையை பயன்படுத்தியதைத் தொடர்ந்து, அதில் சிறிது சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் காரணமாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர், குழந்தையை அழைத்து வந்து கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர். குழந்தையை தவறாக நடத்தினதும், தந்தை ராகவேந்திரரிடம் தகாத வார்த்தைகளில் பேசி  நடந்துகொண்டனர்.

இந்தக் காரணத்தால் மனவேதனை அடைந்த ராகவேந்திரர், அந்த நிகழ்வை வீடியோ எடுத்து உத்தரபிரதேச காவல்துறை, டிஜிபி மற்றும் முதல்வரின் அலுவலகத்தை டேக் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலான பிறகு, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

ஃபசல்கஞ்ச் காவல் நிலையத்தில் ராகவேந்திரர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பேருந்து ஊழியர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உள்ளூர் போலீசார் சமரசம் செய்ய முயன்றதாகவும், தாம் அதை மறுத்துவிட்டதாக ராகவேந்திரர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏசிபி இந்திரபிரகாஷ் சிங் கூறுகையில், “தந்தையின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம், குழந்தைகள் மீதான அக்கறை மற்றும் பொதுமக்கள் மீது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய பொது போக்குவரத்து ஊழியர்களின் பொறுப்பில்லாத  செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.