கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, இந்திராநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரண்ணா (44). இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், 12 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிவம்மாவுக்கு எச்.டி.கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில், இதுபற்றி வீரண்ணாவுக்குத் தெரியவர, கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை குறித்து கிராமப் பெரியவர்களிடம் வீரண்ணா தெரிவித்தபோது, அவர்கள் சிவம்மாவையும் பலராமையும் கண்டித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர்கள் கள்ளக்காதலைக் கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி இரவு சிவம்மாவுக்கு அவரது கள்ளக்காதலன் பலராம் செல்போனில் அழைத்துள்ளார். இதைப்பார்த்த வீரண்ணா, சிவம்மாவிடம் சண்டையிட்டார். அப்போது ஆத்திரமடைந்த சிவம்மா, வீரண்ணாவை அவரது மர்ம உறுப்பில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வீரண்ணா, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் இறந்ததைக் கண்ட சிவம்மா, பின்னர் தனது சேலையால் வீரண்ணாவின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஊர் மக்களிடம் தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதுபற்றி கிராம மக்கள் நஞ்சன்கூடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் சிவம்மாவுக்கும் பலராமுக்கும் இருந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால் சிவம்மாவை பிடித்து போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வீரண்ணாவைத் தான் கொலை செய்து, தற்கொலை நாடகமாடியதை சிவம்மா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, போலீஸார் சிவம்மாவைக் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்த கொலை குறித்த தகவல் அறிந்த கள்ளக்காதலன் பலராம் தலைமறைவாகியுள்ளார். இந்த கொலையில் பலராமுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், தலைமறைவான அவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்காக கணவரை மனைவியே கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.