
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது உணவில் பூச்சிகள் மற்றும் பிளேடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முதல் முறை அல்ல. ஏற்கனவே உணவில் பூச்சிகள், பிளேடு கிடப்பதாக புகார் அளித்த பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஆம்பர்பேட்டில் இருக்கும் மகளிர் விடுதி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் கிடந்தது. அதனை சாப்பிட்ட பத்து மாணவர்கள் வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.