சுங்கக் கட்டணம் செலுத்தாமல் வேகமாக முன்னேறிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதிய கோர விபத்து ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தின் பயங்கரமான வீடியோ, சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.
குஷிநகர் மற்றும் தியோரியா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், தர்யா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலேம்கர் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தில்லி வழியாக பீகாருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து இதுவாகும். இருசக்கர வாகனத்தில் வந்த அப்ராட் அன்சாரி (20) மற்றும் அவரது சித்தப்பா அலிம் அன்சாரி (50) ஆகிய இருவர் மீது இந்தப் பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் சுங்கச்சாவடி அருகே கூடி போராட்டம் நடத்தினர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.
