
விபின் குப்தா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். விபின் குப்தாவிற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.
அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூம் 1.80 லட்சம் எடுக்கப்பட்டதாக விபின் குப்தாவின் மனைவிக்கு செய்தி வந்தது. இதனால் விபின் குப்தாவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விபின் குப்தாவை தேடி வந்தனர்.
அந்த சமயத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் உத்திர பிரதேசத்திற்கு சென்றது தெரிய வந்தது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் விபின் குப்தாவை மீட்டனர். அதோடு அவரை பெங்களூருவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் தன்னைவிட 8 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்ததாகவும், அந்தப் பெண் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், அது தாங்க முடியாமல் தான் வீட்டை விட்டு ஓடியதாகவும் தெரிவித்தார்.
அதோடு மனைவி தன்னை தொல்லை செய்வதால் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்றும், வேண்டுமென்றால் என்னை சிறையில் அடையுங்கள் என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் மனைவியின் தொல்லையால் வீட்டை விட்டு ஓடிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.