உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அருவருப்பான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த சம்பவத்தில், பள்ளி முடிவதற்கு முன், 8 வயது மாணவியிடம் “மந்திரம் காட்டுவதாக” கூறி, ஆசிரியர் ராஜ் குஷ்வாஹா (வயது 19) தனியான அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது.

மாணவி அழத் தொடங்கியதும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அதனை மறைத்து, மாணவியை மீண்டும் வகுப்பிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் மாணவி பள்ளியில் படிக்கும் தனது மூத்த சகோதரியிடம் இந்த சம்பவத்தைக் கூறியதுடன், சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.

உடனே பள்ளி ஊழியர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை ஒரு அறையில் பூட்டி வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் கான்பூர் போலீசார் வந்துசேர்ந்து வழக்குப் பதிவு செய்து, ராஜ் குஷ்வாஹாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் தெரிவித்ததாவது, மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை முயற்சி, சிறுமி மீதான தவறான நடத்தை, மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு, சாட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.