
உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களாக ராம் ஜனம் சிங் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில், பூஜாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்பை ஏற்று கொண்ட அவரது சகோதரர், சமீபத்தில் பூஜாவுக்கு மற்றொரு ஆணுடன் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினார்.
இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ராம் ஜனம் சிங், கோபத்தில் பூஜாவுடன் தகராறு செய்தார். கடந்த மே 1ஆம் தேதி பூஜா வங்கியில் இருந்து திருமணச் செலவுக்காக பணம் எடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நண்பனுடன் பைக்கில் வந்த ராம், “நீ எனக்குக் கிடைக்கவில்லை என்றால் வேறாருக்கும் கிடைக்கக் கூடாது” என கூறியவாறு, பூஜாவின் மீது ஆசிட் வீசியுள்ளார்.
இந்த தாக்குதலில் பூஜாவின் முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 60 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மே 27-ஆம் தேதி அவரது திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பூஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் அவரது நண்பரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.