டெல்லியின் வசீராபாத் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 16 வயதுடைய பள்ளி மாணவன் ஒருவர், மூன்று சிறார்களால் கடத்தப்பட்டு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். 9-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட சிலர் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்க விட்டால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கடைசியாக மூன்று சிறுவர்களுடன் ஜரோடா புஷ்தா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரியவந்தது. இதில் இரண்டு பேரின் வயது 16 மற்றும் 17 என குறிப்பிடப்படுகிறது. போலீசார் சந்தேகத்தின் பேரில் மூன்று சிறுவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள், பள்ளி மாணவனை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, அங்கு கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு நாள் கழித்து, அவர்கள் மாணவனின் சிம்கார்டை பயன்படுத்தி அவரது தந்தைக்கு அழைத்து, ரூ.10 லட்சம் பிணை தொகை கேட்டுள்ளனர். அந்த சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் மாணவனின் உடலை பல்ஸ்வா ஏரிக்கரையில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மாணவனின் உடலை துண்டிக்கவும் அந்த சிறுவர்கள் முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.