குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பாய் போரிச்சா(85). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார். இவரது மகன் பிரபாத்துக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ராம்பாய் போரிச்சா மறுமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதற்கு பிரபாத் மறுப்பு தெரிவித்ததால் அடிக்கடி தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று பிரபாத்தின் மனைவி ஜெயபென் தனது மாமனாருக்கு தேநீர் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே மறுமணம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த ஜெயபென் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கையில் துப்பாக்கியுடன் ராம்பாய் போரிச்சா வெளியே வந்தார். அறைக்குள் பிரபாத் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபென் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்க அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராம்பாய் போரிச்சாவை கைது செய்தனர்.