ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் திறமையில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவரது உடற்தகுதி ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறினார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரோஹித் சர்மா அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக ஆனதில் இருந்து, இந்தியா 68 போட்டிகளில் (5 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 42 டி20) விளையாடியுள்ளது. அதில் அவர் 39 (2 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 29 டி20) மட்டுமே விளையாடியுள்ளார். இதற்கு மிகப்பெரிய காரணம், நிச்சயமாக  பணிச்சுமை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை காரணமாக வைத்து பல போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. மேலும் காயங்கள் காரணமாக ரோஹித் முக்கிய தொடர்களை தவறவிட்டுள்ளார்.. இந்திய கேப்டனின் பலவீனமான உடற்தகுதி கடந்த 12 மாதங்களில் ஒரு முக்கிய பேசுபொருளாக உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக ஒரு இந்திய கேப்டன் கூட இவ்வளவு ஆட்டங்களை தவறவிட்டதில்லை. ரோஹித்தின் சோகத்தை மேலும் சேர்த்தது அவரது பேட்டிங்கின் மோசமான வடிவம். நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ரோஹித் பேட்டிங் விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் திறமையில் எந்த பிரச்சனையும் இல்லை, கடந்த பத்தாண்டுகளில் விராட் கோலியுடன் இணைந்து இந்திய பேட்டிங்கின் தூண்களில் அவர் ஒருவராக இருந்தார் – ஆனால் அவரது உடற்தகுதி ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்று பழம்பெரும் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறினார். இந்திய கேப்டனின் உடற்தகுதி குறித்து தனக்கு கடுமையான சந்தேகம் இருப்பதாக கபில் கூறினார்.

இதுகுறித்து கபில் தேவ் கூறியதாவது, ரோஹித் ஷர்மாவிடம் எந்தக் குறையும் இல்லை. அவரிடம் எல்லாமே இருக்கிறது, ஆனால் தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன், அவரது உடல்தகுதி குறித்து மிகப்பெரிய கேள்விக்குறி உள்ளது. அவர் போதுமான உடற்தகுதி உள்ளவரா? ஏனெனில் ஒரு கேப்டன் மற்ற வீரர்களை உடற்தகுதி பெற ஊக்குவிக்கும் ஒருவராக இருக்க வேண்டும், சக வீரர்கள் உணரும் வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களின் கேப்டனை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று சொல்லும் அளவிற்கு இருக்க வேண்டும் என்றார்.

அதாவது ரோஹித் சர்மா தனது உடற்தகுதியை மேம்படுத்தினால், அது மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். மேலும் ரோஹித்தின் உடற்தகுதியில் பெரும் சந்தேகம் உள்ளது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர் கேப்டனாக இருந்து இவ்வளவு ரன்கள் எடுக்கவில்லை என்று நிறைய விமர்சனங்கள் உள்ளன, அதுபற்றி எனக்கு கவலையில்லை, நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவரது கிரிக்கெட் திறமையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்.அவர் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தினால், ஒட்டுமொத்த அணியும் அவரைச் சுற்றி அணி திரளும், ”என்று கூறினார்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி 3:1 என்ற கணக்கில் தொடரை  கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அசாமின் பர்சப்பாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இலங்கையை மதியம் 1:30 மணிக்கு எதிர்கொள்கிறது.