ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவருக்கு மற்ற தலைவர்களை விட அரசியலில் அதிக அனுபவம் உள்ளது. அரசியலில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவர். அம்மா ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கினாரோ அதே அளவுக்கு தான் எடப்பாடி பழனிச்சாமியும் அவரை மதிப்புடன் நடத்துகின்றார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதிமுகவிற்கு கடைசி வரை செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கட்சியை எதிர்த்து தேர்தல் களத்தில் எதிரிகளுடன் சேர்ந்து எங்களை எதிர்க்கின்றார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு கிடையாது என்று பேசி உள்ளார்.