
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் வெற்றியில் தோனிக்கும் பங்கு உண்டு. அதாவது முதன்முதலாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவரிடம் இருக்கும் திறமை உணர்ந்த தோனி அவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்தார். அதோடு தான் தடுமாறிய கால கட்டங்களில் தோனி மட்டுமே மெசேஜ் மூலமாக ஆதரவு கொடுத்ததாக பல இடங்களிலும் விராட் கோலி கூறி இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலிக்கும் தனக்கும் இடையே உறவு குறித்து தோனி கூறியுள்ளார். அதில், ” நான் உறவைப் பற்றி பேசுவேன். ஆனால் அந்த மெசேஜ் பற்றி அல்ல. அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன் . நானும் விராட் கோலியும் ஆரம்பத்திலிருந்து வெற்றி பெற பங்காற்ற விரும்புவர்கள் .
அவர் 40, 60 ஓவர்களில் மகிழ்ச்சியை அடைய மாட்டார். சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் தான் இருக்க விரும்புவார். அந்த பசி ஆரம்பத்திலிருந்து அவரிடம் இருக்கிறது. இங்கே ஏதாவது வித்தியாசமாக செய்ய முடியுமா? என்பது போன்ற விஷயங்களை என்னிடம் கேட்பார். அவருக்கு நேர்மையான கருத்துக்களை வழங்குவேன். அப்படித்தான் எங்களுடைய நட்பு வளர்ந்தது. ஆரம்பத்தில் கேப்டன் – புதிய வீரர் என்று தொடங்கிய நாங்கள் நிறைய பேசி நண்பர்களாக மாறினோம். அதே சமயம் சீனியர் – ஜூனியர் என்ற சிறிய கோடு எங்களுக்கு இடையே இருப்பதாக கருதுகிறேன். ஆனாலும் இப்போது நாங்கள் நண்பர்கள்தான்” என்று கூறியுள்ளார்.