
தர்மபுரி மாவட்டம் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு மேனிகா (16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பழனி தனது மனைவி மற்றும் மகளுடன் ஒகேனக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு அவர்கள் ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
பின்னர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது மேனிகா ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பெற்றோரும் உறவினர்களும் மேனிகாவை காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.