நவீன கிரிக்கெட்டில், குறிப்பாக ஐபிஎல் தொடரில், மைதானத்திற்கு வெளியே வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் கேமராவில் பதிவு செய்து அதனை ‘கண்டென்ட்’ ஆக மாற்றும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியான கேமரா கண்காணிப்பு வீரர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஐபிஎல் சீசன்களில் ரசிகர்களைக் கவர பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், சின்னங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சம்பக்’ (Champak) என்ற ரோபோ நாய், ஒளிபரப்பில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது குறித்துப் பேசிய விராட் கோலி, தனது நெருங்கிய நண்பரான நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுடன் தான் பேசியபோது நடந்த ஒரு சுவாரசியமான, அதே சமயம் எரிச்சலூட்டும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

விளையாட்டுத் தளத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கோலி கூறுகையில், நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேன் வில்லியம்சனுடன் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த ரோபோ நாய் எங்களை நோக்கி வந்து விசித்திரமாக கைகளை அசைக்கத் தொடங்கியது. எனக்குள் ‘இவன் ஏன் இப்போது இப்படிச் செய்கிறான்?’ என்று தோன்றியது. வில்லியம்சன் எனது நெருங்கிய நண்பர். நான் அந்த ரோபோவை அலட்சியப்படுத்திவிட்டு, அதை இயக்குபவரிடம், ‘தயவுசெய்து இதை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள், எங்களை நிம்மதியாகப் பேச விடுங்கள்’ என்று கூறினேன்.

மேலும் தொடர்ந்த அவர், “அவன் எனது நண்பன். நாங்கள் இருவரும் பேசும் ஒவ்வொரு விஷயமும் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, ‘கேன் மாமாவும் விராட் கோலியும் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம்’ என்று வீடியோவாக மாறுவதை நான் விரும்பவில்லை. எனது நண்பனுடன் சுதந்திரமாகப் பேசுவதற்கு எனக்கு கொஞ்சம் தனிப்பட்ட இடம்  தேவைப்படுகிறது என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்தியக் கேப்டனின் இந்த கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஐபிஎல் தொடரின் இத்தகைய வர்த்தக ரீதியிலான அணுகுமுறை ரசிகர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தாலும், ஓய்வு நேரங்களிலும் வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலைத் தரும் என்று நிபுணர்களும் ரசிகர்களும் கோலியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.