பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கௌதம் அதானி லஞ்சம் கொடுத்த நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின் அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஸ்டாலின் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது அறிக்கையை வெளியிட்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என பேசினார்.

முதல்வரின் பேச்சுக்கு பாமக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? முதல்வர் பேசியதில் என்ன தவறு உள்ளது? தேவையில்லாமல் தினமும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார் என்று தானே கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கூறியதில் என்ன தவறு உள்ளது? தமிழில் பயன்படுத்தப்படும் வார்த்தைதானே அது. என்ன அன்பார்லிமென்டரி வார்த்தையா? அது எப்படி தவறாக முடியும்.

அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் அவர் வெளியிட்ட அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள் எவ்வளவு கொச்சையாக பேசியுள்ளார் என்பது தெரியும். எங்கள் முதல்வர் கண்ணியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணிய குறைவாக எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்கள் முதல்வருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. தவறாக இருந்தால் அதற்கு என்ன பிரயாத்தம் செய்ய வேண்டுமோ அதை முதல்வர் ஸ்டாலின் செய்வார். முதல்வர் ஸ்டாலின் பேசியதில் எள் அளவும் தவறு இல்லை என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.