
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் இயக்குனர் பாலாவின் 25 வருட திரைப்பயணம் குறித்த விழா இரண்டும் என்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது நடிகர் சூர்யா தான் முன்னதாக வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கான பஸ்ட் லுக் புகைப்படங்கள் கூட வெளிவந்த நிலையில் திடீரென பாலா சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு அவருடைய தயாரிப்பு நிறுவனமும் படத்தில் இருந்து விலகியது.
இதன் காரணமாக சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆனால் அதனை அவர்கள் மறுத்தனர். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாலா மற்றும் சூர்யா இருவரும் வணங்கான் பட நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பாலா பற்றி பேசினார். அவர் பேசியதாவது, சேது படம் பார்த்த பிறகு அதிலிருந்து வெளிவர 100 நாட்கள் ஆன நிலையில், அப்படிப்பட்ட ஒரு படைப்புக்குப் பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. என்னை நானே புரிந்து கொள்வதற்கு முன்பாக என்னை வைத்து படம் இயக்க முன்வந்தவர் பாலா என்று கூறினார். நந்தா திரைப்படம் வெளிவந்த பிறகு தான் கௌதம் மேனன் காக்க காக்க திரைப்படத்தில் நடிக்க என்னை அழைத்தார்.
அதைப் பார்த்துவிட்டு தான் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக நடிக்க ஏ.ஆர் முருகதாஸ் என்னை அழைத்தார். கடந்த 2000ம் ஆண்டு எனக்கு பாலா சாரிடம் இருந்து போன் கால் மட்டும் வரவில்லை என்றால் கண்டிப்பாக இதெல்லாம் நடந்திருக்காது என்று உருக்கமாக கூறினார். இதேபோன்று இயக்குனர் பாலாவும் சூர்யா பற்றி பேசினார். அவர் பேசியதாவது, சூர்யா இருக்கும்போது நான் புகைபிடிக்க மாட்டேன். ஏனெனில் நான் சிகரெட் பிடிப்பதை பார்க்கும்போது மற்றவர்கள் எனக்கு அட்வைஸ் கூறும்போது சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். அவர் ஒரு நடிகராக இருந்தால் வருத்தப்பட முடியாது. ஆனால் எனக்கு தம்பியாக இருப்பதால்தான் வருத்தப்படுகிறார் என்றார். மேலும் சூர்யா மற்றும் பாலா இருவரும் வணங்கான் பட விழாவில் ஒன்றாக கலந்து கொண்டதன் மூலம் இருவருக்கும் பிரச்சனை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.