சீனாவின் விஞ்ஞானிகள், நிலவுத்தட்டத்திலிருந்து (low-Earth orbit) மனித முகங்களை அடையாளம் காணக்கூடிய உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கேமராவை உருவாக்கியுள்ளனர். சீன அறிவியல் அகாடமியின் ஏரோஸ்பேஸ் தகவல் ஆராய்ச்சி நிறுவனத்தால் (Aerospace Information Research Institute) உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், 100 கிலோமீட்டர் (62 மைல்கள்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான புகைப்படத்தை எடுக்கும். இந்த புதிய கேமரா, வெளிநாட்டு ராணுவ செயற்கைக் கோள்கள் மற்றும் பூமியின் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த துல்லியத்துடன் கண்காணிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படும் முன்னணி உளவு கேமராவில் உள்ள லென்ஸ்களை விட 100 மடங்கு அதிகமான விபரங்களை பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில், 1.6 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 2 சென்டிமீட்டர் அளவிலான விபரங்களைப் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கிங்ஹாய் ஏரியில் 101.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 1.7 மில்லிமீட்டர் அளவிலான விபரங்களை பதிவு செய்ய முடிந்தது.

செயற்கைக் கோள்களின் உளவு திறன் அதிகரித்து வருவதால், பல நாடுகளின் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். அமெரிக்காவின் ‘அல்பெடோ ஸ்பேஸ்’ (Albedo Space) எனும் நிறுவனம் பூமியில் உள்ள மனிதர்களை நேரடியாக நெருக்கமாக பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் இது முக அடையாளம் காணும் திறன் கொண்டிருக்காது என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.