இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்வதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. இந்த பான் கார்டு வங்கிகளில் நிதி பரிவர்த்தனைக்கும் முக்கியமான ஆவணமாக திகழும் நிலையில் பான் கார்டு பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களும் நடப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது மோசடி செய்யும் நபர்கள் உங்கள் பான் கார்டில் கடன் பெறுகிறார்கள். ஆனால் அந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்தும் பொறுப்பு உங்கள் மீது வந்து விழுகிறது. அதோடு சட்ட விரோதமான முறையில் நகைகளை வாங்குதல், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கு போன்றவைகளுக்கும் பான் கார்டு பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் பான் கார்டு விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பதோடு யாருக்காவது பான் கார்டு நகலை கொடுத்தால் அதற்கான முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு தான் கொடுக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை சரிபார்த்துக் கொள்வதன் மூலம் பான் கார்டு விஷயத்தில் நடைபெறும் மோசடிகளை தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் அளிக்கும் வகையிலான இணையதளத்தில் உங்கள் பான் கார்டு விவரங்களை கொடுக்கக்கூடாது. மேலும் உங்களுடைய பான் கார்டை யாராவது தவறாக பயன்படுத்துவது தெரிய வந்தால் நீங்கள் TIN NSDL என்ற வெப் சைட்டில் புகார் கொடுக்கலாம்.