கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பல்லாரி டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில், மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ரவிகிரண் (42) என்ற திருமணமான நபர், கடந்த 2025-ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

மாணவியின் குடும்ப சூழ்நிலை மற்றும் படிப்பு விவகாரங்களில் உதவி செய்வது போல நடித்து, அவரிடம் ஆசைவார்த்தை கூறி காதலிக்கத் தொடங்கியுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்த ரவிகிரண், அந்த சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல பேராசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் உண்மை சிறுமிக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கல்லூரி வளாகத்திலேயே ரவிகிரணிடம் இதுகுறித்து நியாயம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது சுயரூபத்தைக் காட்டிய பேராசிரியர், தனக்குக் குடும்பம் இருப்பது உண்மைதான் என்றும், வெறும் உல்லாசத்திற்காக மட்டுமே பழகியதாகவும் கூறி சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி, பெற்றோரிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூற, அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி பேராசிரியர் ரவிகிரணை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.