காசா நகரத்தில் இன்று காலை பெரிய துயர சம்பவம் நடந்தது. அங்குள்ள ஃபாஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் பலரும் குழந்தைகள் என்று தகவல் வந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் நூறு பேருக்கும் மேல் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாதுகாப்புக்காக தங்கி இருந்தனர்.

இஸ்ரேல் தரப்பில் இருந்து இந்த தாக்குதல் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளி, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகளின் கட்டளை மையமாக இருந்தது. முக்கிய பயங்கரவாதிகள் அங்கு இருந்ததால் நாங்கள் அதனை குறிவைத்து தாக்கினோம் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்தோம் என்றும் அவர்கள் கூறினாலும், பலியானோர் பெரும்பாலானோர் சாதாரண மக்கள், குழந்தைகள் என்றுதான் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் காசா பகுதியின் சுமார் 77% நிலப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, தொடங்கிய போரில் இதுவரை 53,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் பசிக்கொண்டும், வீட்டில்லாமல் தவித்தும் வாழ்கின்ற இந்த நேரத்தில், பள்ளி மீது நேரடியாக தாக்குதல் நடத்தியது உலக நாடுகளில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.