ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மியூசியத்தில், எலோன் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ஜெப் பெசோஸ் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களின் முகங்களுடன் ரோபோ நாய்கள் உலா வருவது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல டிஜிட்டல் கலைஞர் பீப்பிள் (Beeple) உருவாக்கியுள்ள இந்த வினோதமான கலைப் படைப்பில், ரோபோ நாய்களுக்கு சிலிகான் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட உலகத் தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் முகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நாய்கள் மியூசியம் முழுவதும் சுற்றித் திரிவது மட்டுமின்றி, அங்கிருக்கும் காட்சிகளைத் தனது கேமராவில் படம் பிடித்து, அந்தந்த நபர்களின் சிந்தனைக்கு ஏற்ப AI மூலம் மாற்றி, புகைப்படங்களாக (கழிவுகளை வெளியேற்றுவது போல) அச்சிட்டுத் தள்ளுகின்றன.

உதாரணத்திற்கு, பிக்காசோ முகமூடி அணிந்த ரோபோ நாய் வெளியிடும் புகைப்படம் ‘கியூபிசம்’ பாணியிலும், ஆண்டி வார்ஹோல் முகமூடி அணிந்த நாய் வெளியிடும் புகைப்படம் ‘பாப் ஆர்ட்’ பாணியிலும் இருக்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் நமது பார்வையைத் தொழில்நுட்ப நிறுவனங்களின் அல்காரிதம்களே (Algorithms) தீர்மானிக்கின்றன என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

ஒரு காலத்தில் கலைஞர்கள் உலகைப் பார்த்த விதம் மக்களின் பார்வையை மாற்றியது, ஆனால் இன்று சில கோடீஸ்வரர்கள் உருவாக்கும் சாப்ட்வேர் குறியீடுகள் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன என பீப்பிள் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

மியூசியத்தில் இந்த ரோபோ நாய்கள் வெளியிடும் புகைப்படங்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சேகரித்துச் செல்கின்றனர். ‘டிஜிட்டல் கலை’ வரலாற்றில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் தனது படைப்பை விற்று சாதனை படைத்த பீப்பிளின் இந்த புதிய முயற்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.