உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக வழங்கும் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை பெரிய அளவில் ஆனது. மருத்துவமனையில் இருக்கும் போதும், மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிறகும், அவர் குணமடைவதற்கு நாளாகும்.

மேலும் மத்திய அரசு ஊழியர்களிடையே உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கமாக பொதுநல நோக்கில் அவர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள து. உறுப்பு தானம் செய்பவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை எப்படிபட்டது என்று பார்க்காமல் அரசால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரைப்படி 42 நாள் விடுப்பு வழங்கப்படும். இந்த சிறப்பு விடுப்பு மருத்துவமனையில் ஊழியர் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து தொடங்கும்.

இருப்பினும் தேவைப்பட்டால் அரசால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிறப்பு விடுப்பு வழங்கப்படும். பல தரப்பில் இருந்தும் வந்த வேண்டுகோள்களின் அடிப்படையில் மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை ஆலோசித்து உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிப்பது குறித்து முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.