ஜாங்சியில் காதலுடன் தொடங்கிய ஒரு திருமண உறவு வெறுப்பு மற்றும் வன்முறையின் கொடூரக் கதையாக மாறியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் திருமணம் செய்துகொண்ட கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஆழமான விரிசல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு மோசமாகியுள்ளது. உறவில் ஈடுபட மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், அவளை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒருவருக்கொருவர் உயிரையே கொடுப்பவர்கள் போல் இருந்தவர்கள், தற்போது ஒருவரையொருவர் கொல்லத் துணிந்துள்ளனர் என்பதை அப்பகுதி மக்களால் நம்ப முடியவில்லை. படுகாயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
சியாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் அஹிர்வார். இவருக்கும் தீஜா என்பவருக்கும் இடையே காதல் இருந்த நிலையில், இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆவதற்கு முன்பு முகேஷ் அடிக்கடி தன் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், ஒரு நாள் வீட்டாரால் பிடிபட்டதால் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் மனைவி தீஜா தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தாலும், ஒரு வருடம் கழித்து கணவரின் குணம் மாறத் தொடங்கியது. அதன் பிறகு அவர் சண்டையிட்டு, தன்னை அடிக்கத் தொடங்கியதாகவும் தீஜா கூறியுள்ளார்.
ஒரு நாள் முன்னதாகவே முகேஷ் வலுக்கட்டாயமாகத் மனைவியுடன் உடல் உறவு வைத்துக் கொண்டார். அதன் பிறகு மீண்டும் வற்புறுத்தியபோது, தீஜா எதிர்ப்பு தெரிவித்தார். “உங்களுக்கு என்னைப் பற்றி அக்கறை இல்லை என்றால் ஏன் உறவு வைக்க விரும்புகிறீர்கள்” என்று தீஜா கேட்டது முகேஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கோபத்தில் அவர் தீஜாவைத் தாக்கத் தொடங்கினார், அப்போது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டாரும், குடும்பத்தினரும் காயமடைந்த நிலையில் கீழே கிடந்த தீஜாவை மீட்டு, மவுராணிப்பூர் சமுதாயச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவர் ஜாங்சி மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
