ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெறுவதற்காகச் சென்ற டெலிவரி ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குறுகிய காணொளியில், டெலிவரி ஊழியர், வாடிக்கையாளர் “பயன்படுத்தப்பட்ட” ஜீன்ஸ் மற்றும் காலணிகளைத் திரும்பக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், சில அடி தூரத்தில் நிற்கும் வாடிக்கையாளர், தாங்கள் “தவறான பொருட்களை” பெற்றதாகவும், அதனால்தான் அவற்றைத் திருப்பி அனுப்புவதாகவும் வலியுறுத்துகிறார்.

இதையடுத்து நடப்பதுதான் இணையத்தில் பலரின் கருத்தைப் பிரித்துள்ளது. கடுப்பான டெலிவரி ஊழியர், அந்த ஜீன்ஸ் மற்றும் காலணிகளை தரையில் போட்டுவிட்டு அங்கிருந்து திரும்பிச் செல்கிறார். “பயன்படுத்தப்பட்ட பொருட்களைத் திரும்பக் கொடுக்க முயன்ற வாடிக்கையாளரை டெலிவரி ஊழியர் கையும் களவுமாகப் பிடித்தார், அவர் அதைத் திரும்ப எடுக்க மறுக்கிறார்!” என்ற தலைப்புடன் இந்தக் காணொளி பகிரப்பட்டுள்ளது.

“>

 

இது எந்த மின்வணிகத் தளத்தின் ஆர்டர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், “வாடிக்கையாளர் உண்மையிலேயே பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் பெற்றிருந்தால் என்ன?” என்றும், “ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க டெலிவரி ஊழியருக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சிலர், “டெலிவரி ஊழியர் செய்தது சரி” என்றும், “பலர் ஒருமுறை உடையை அணிந்துவிட்டுத் திரும்பக் கொடுக்கிறார்கள், இது அம்பலப்படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.