
பெங்களூருவில் ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் பைக் டாக்ஸி சேவையை முன்பதிவு செய்த பயணியை, ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்த பயணி ஒருவர், செயலியின் மூலம் பைக் டாக்ஸியை அழைக்க முயற்சித்தார்.
அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரை நிறுத்தி, “அதை முன்பதிவு செய்யாதே! நான் உன்னை இறக்கி விடுகிறேன்” என வற்புறுத்தியுள்ளார். ஆனால் பயணி தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்து, பைக் டாக்ஸி மூலம் பயணத்தை தொடர்ந்தார்.
பைக் ஓட்டுநருடன் பயணத்தைத் தொடங்கியதும், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அந்த பயணியை கடுமையாக மிரட்டியுள்ளனர். “நீ அவனுடன் போவியா? பார்த்துக்கொள்ளுறேன்!” என ஒருவர் கத்த, இன்னொரு ஓட்டுநர் பைக்கை முந்திச் சென்று அதனைத் தடுக்க முயற்சி செய்தார்.
மேலும் அந்த பைக்கைச் சுற்றி நின்று பயணியை நோக்கி, “உன் கையை வெட்டுவோம்!” “இந்த நகரத்தில் சுதந்திரமாக நடக்க முடியாது” என கடுமையான வார்த்தைகளைச் சொன்னார்கள்.
இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட பயணியின் ரெடிட்டில் பகிர்ந்த பதிவால் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. “நாங்கள் உள்ளூர்வாசிகள், எங்களை விட யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டிய ஓட்டுநரின் வார்த்தைகள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் செயலி அடிப்படையிலான போக்குவரத்து சேவைகளின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.