
கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வரும் நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வாலிபரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சௌமியாவிடம் பேசுவதை அவர் தவிர்த்த நிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் காதலனிடம் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி தன்னுடைய காதலனை நேரில் சந்தித்த சௌமியா திருமணம் செய்து கொள்ளுமாறு மிகவும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் வாலிபர் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. இங்கிருந்து முதலில் வீட்டுக்கு கிளம்பி செல் என்று கூறியுள்ளார். இருப்பினும் சௌமியா கேட்கவில்லை. அவரை வாலிபர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சித்தும் சௌமியா தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததோடு திருமணம் செய்து கொள்ள சம்பாதிக்காவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ருஜன் தன் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவருடைய உடலை குழிதோண்டி புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போன்று வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் சௌமியா வீட்டிற்கு திரும்பாததால் அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்ருஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சவுமியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.