ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப் பொருட்கள் உள்ளிட்டவை குரங்கால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் உரிமையாளர் சுமார் ரூ.50,000 இழப்பில் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் செந்தாமரை, “குரங்கை கண்டதும் உடனே வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தோம். ஆனால் தாமதமாக வருவார்கள் என தெரிவித்ததால் முக்கியமான நேரம் வீணாகியது.

அந்த இடைவெளியில் குரங்கு கடையில் உள்ள பல பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியது,” என கூறினார். மேலும், இந்த பகுதியில் ஒற்றை குரங்குகள் அடிக்கடி வந்தும் சேதங்களை ஏற்படுத்தும் நிலையில், அவற்றை பிடிக்க துறை சார்பில் முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையின் செயல்பாடு குறித்து கேள்விக்குறிகள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.